April 22, 2020
தண்டோரா குழு
மறு பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகையும் கிடைத்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். கோவை மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வருக்கு மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகை,தொகுப்பு கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கூட்டு குழுவினர் கூறுகையில்,
உணவு தொகுப்பு,உதவி தொகை வழங்கப்படுவதாக கொடுக்கப்பட்ட பட்டியலில் வாரிய பதிவு நடைமுறையில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பெயர் விடுபட்டு உள்ளதாகவும் இவர்களுக்கு உணவுப் பட்டியலில் பெயர் விட்டு விட்டுப் போனதால் நிதி உதவி கிடைக்குமா என்ற அச்சம் தொழிலாக மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே விடுபட்டுப் போன தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.144 தடை உத்தரவின் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு அன்றாட குடும்ப வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவித்தனர்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி உதவி, மகப்பேறு கால உதவி,திருமண உதவி,இயற்கை மரணத்திற்கான உதவி,பணியிடத்திற்கு வழியில் விபத்தில் மரணமடைந்தார் உதவி ஆகிய தொகையை உயர்த்தி வழங்கலாம் என நல வாரிய கூட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மாண்புமிகு தொழிலாளர் அமைச்சர் அறிவித்திருந்தார். அறிவிப்பு வெளியிட்டு 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இது உடனடியாக அமலுக்கு வரும் என தொழிலாளர்கள் ஆவலுடன் காத்து இருப்பதாகவும் இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என கூட்டுக் குழு அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.