September 11, 2017
தண்டோரா குழு
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் மயில் வேட்டையாடிய இருவரை சிறுமுகை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை அடுத்த தேன்கல் பாறை கரடு அருகில் உள்ள பட்டா நிலத்தில் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்ற போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மயில் வேட்டையாடியது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யபட்டனர். அந்த இருவரின் பெயர்கள் ரவி மற்றும் வெள்ளியங்கிரி ஆகும். அவர்களிடம் இருந்து இரண்டு மயில்களின் உடல்கள், ஹெட்லைட், இரு சக்கர வாகனம், அரை டப்பா கரு மருந்து, பால்ரஷ் குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.