January 30, 2019
தண்டோரா குழு
மதுரை மாநகராட்சி பள்ளியில் முதல் முறையாக ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. மதுரை தத்தனேரியில் உள்ள திரு.வி.க. பள்ளியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் எனப்படும் ஸ்டெம் கல்வி முறையின் கீழ் இந்த ஆய்வகமானது 13லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் விழாவில் பங்கேற்று ஆய்வகத்தைத் திறந்து வைத்தார். எந்திர மனிதன் எடுத்துக் கொடுத்த கத்திரிக்கோலை வைத்து அவர் ரிப்பனை வெட்டினார்.
இந்த ரோபோ அறிவியல் கல்வி பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற அறிவியல் ஆசிரியர்களும் ரோபோ அறிவியலில் வல்லுநர்களும் இந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு அடுத்த ஓராண்டில் ரோபோ தொழில்நுட்பம் பற்றி கற்பிக்க உள்ளனர். இதில் எந்திர மனிதர்களை வடிவமைத்தல், இயங்க வைத்தல், கட்டளைகளை கேட்டு நடக்கச் செய்தல் போன்றவற்றை செய்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ரோபோ ஆய்வகத்தை பயன்படுத்துவது பற்றி சொல்லிக்கொடுக்க அமெரிக்க இந்திய கூட்டமைப்பைச் சேர்ந்த ரோபோ தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்வந்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இந்த அரசுப் பள்ளியில் ரோபோ ஆய்வகம் அமைவது குறிப்பிடத்தக்கது.