September 26, 2020
தண்டோரா குழு
மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது என கோவையில் பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேளாண் சீர்திருத்த மசோதா குறித்த கருத்து கேட்பு மற்றும் விளக்க ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பாஜக துணைத் தலைவர் கனகசபாபதி, வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.நாகராஜ் பேசுகையில்,
கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்துள்ளதாகவும் இங்கு வந்துள்ள பெரும்பாலான விவசாயிகள் இந்த வேளாண் மசோதாவை வரவேற்றுள்ளனர் என தெரிவித்தார்.அதேபோல, இந்த மசோதா குறித்து விவசாயிகளிடம் எதிர்கட்சிகள் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பி, எதிர்கட்சிகள் நாடகம் நடத்தி வருவதாகவும், நாளை மறுதினம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் வெற்று அரசியல் எனவும் தெரிவித்தார்.கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் ஆளும் போது விவசாயிகளுக்கு ஏதும் செய்யவில்லை என்றவர், தற்போது விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் இடைத்தரகர்கள் தான் எனவும் தற்போது உண்மையான விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில்,
மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது எனவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் கருத்து கேட்காமலே சட்டத்தை இயற்றலாம், அதற்கு சட்டத்தில் உரிமை உண்டு என்றார். மேலும், பாரத பிரதமர் நரேந்திர மோடி தொழில்துறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் எனவும் வேளாண் மசோதா குறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கருத்துக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டதாக கூறிய அவர், விவசாயிகள் எதிர்ப்புகள் தெரிவித்த எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்று தெரிவித்தார்.