August 20, 2020
தண்டோரா குழு
பொள்ளாச்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் மற்றும், கோவை சரக காவல் துறை துணை தலைவர் வழிகாட்டுதலின் பேரிலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அனிதா மற்றும் விஜய்கார்த்திக் ராஜா ஆகியோர் மேற்பார்வையில் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமார் தலைமையில் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் வட்ட ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், மனோகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், ரகுநாத் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டும் தனி படையினர் தீவிர விசாரணை மேற்க் கொண்டு எதிரிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில் திருட்டு வழக்குகளின் சம்மந்தப்பட்ட பழங்குற்றவாளிகள் நண்டுக்காரன் என்ற முகமது யாசின் (31) பாண்டியன் ஆகியோர் இன்று பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகே சந்தேகத்தின் பேரில் கைது செய்தும் இருவரையும் விசாரணை செய்ததில் அவர்கள் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் நான்கு குற்ற சம்பவங்களை செய்தது தெரிய வந்தது.
அதில் பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியதாகவும், பொள்ளாச்சி வஞ்சியாபுரம் அரசு டாஸ்மார்க் மதுபானக்கடையின் சுவரை துளை போட்டு மது பாட்டில்களையும், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு, அன்பு நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பணமும், கோட்டூர் கரியான் செட்டிப் பாளையத்தில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இருவரிடமிருந்து சுமார் 55 1/2 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் ரூபாய் 1,28 ,000/- மும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய களவுச் சொத்தின் தற்போதைய மதிப்பு மொத்தம் சுமார் 25 இலட்சம் ஆகும்.
இருவரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 பொள்ளாச்சி ஆஜர்படுத்தி நீதிமன்றகாவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இக்குற்றவாளிகளை கைது செய்தும் வழக்கின் களவுச் சொத்தை கைப்பற்றிய தனிப்படையினரை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.