May 17, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மார்ச் இறுதி வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் பேருந்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து,பேருந்து நிலையங்கள் அனைத்தும் தற்காலிக காய்கறி சந்தைகளாக செயல்பட்டு வந்தன.
இதற்கிடையில், தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் கோவை உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை முதல் இ.பாஸ் இல்லாமல் போக்குவரத்துகள் இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து,பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த காய்கறிசந்தைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு பேருந்துகள் இயங்குவதற்கு தயாராகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கோவையில் நேற்றுவரை தற்காலிக காய்கறி சந்தைகளாக செயல்பட்டு வந்த காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் அனைத்தும் முழுமையாக தூய்மை செய்யப்பட்டு பேருந்துகள் இயங்குவதற்கு தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையம் வெங்காயம் மற்றும் தக்காளி காய்கறிகளை மொத்த வியாபாரம் செய்யும் சந்தையாக செயல்பட்டு வந்தது.இந்த சூழலில், வியாபாரிகளை அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற கூறியதால் பெரும்பாலான சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு சிரமம் ஏற்படுவதாகவும் போதுமான இட வசதிகளை செய்து தரக்கோரியும் அதுமட்டுமின்றி அங்கு உள்ள சரக்குகளை மாற்றுவதற்கு 3,
5 நாட்கள் அவகாசம் கேட்டும் அங்கு வந்த அரசு அதிகாரியிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.