October 8, 2020
தண்டோரா குழு
செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் பிறந்த நாளுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கடலூர் மாவட்டம் அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு புதுநகர் காவல் நிலைய காவலர்கள் ரஞ்சித், ரங்கராஜ், அசோக் ஆகிய மூன்று பேரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலக தரப்பில் கேட்டபோது நிர்வாக பணி காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றனர். ஆனால் கடலூரில் பல காவலர்கள் இருக்கும் குறிப்பிட்டு இந்த மூன்று பேர் மட்டும் மாற்றப்படுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த இடமாற்ற நிகழ்வை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த த.பெ.தி.க பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில்,
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது குற்றம் என்பது போல மூன்று காவலர்களும் தண்டிக்கபட்டு உள்ளனர் எனவும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது குற்றம என தமிழக அரசு அறிவித்து உள்ளதா எனவும் காவல் துறையினர் மாலை அணிவிக்க கூடாதா என கேள்வி எழுப்பினார்.ஜாதி சங்க தலைவர்களின் சிலைக்கு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்வதாகவும் மாவட்ட அளவில் உள்ளவர்கள் கோவில்களில் தீ மிதி விழாவில் கலந்து கொள்கின்றனர். மதசார்பற்ற நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பெற்று தந்த பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து காவலர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.பெரியார் சிலைக்கு மரியாதை செய்த காவலர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.