October 12, 2020
தண்டோரா குழு
கோவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதா அறிமுகத்தின்போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. விவசாயிகளைப் பணியாளர்களாக மாற்றி கார்ப்பரேட்டுகள் கையில் இந்திய விவசாயத்தை ஒப்படைக்கும் செயல்,சந்தை முறை முற்றிலும் அழியும், விவசாயிகள் கார்ப்பரேட்டுகள் கையில் சிக்கி அழியும் நிலை என விவசாயிகள் இந்த சட்டத்தால் பல்வேறு வகையில் பாதிக்கபடு வார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இதைக் கண்டித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் புதிய வேளாண் சட்டமசோதாவை எதிர்த்து மறியல் போர் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம் விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுவதாக கூறி மத்திய அரசை கண்டித்தும் அதற்கு துணை போன மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றி விட்டு தற்போது விவசாயிகளிடம் கருத்து கேட்பது போல மோடி அரசு நாடகம் ஆடி வருவதாகவும்,இந்த சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.