June 25, 2026
தண்டோரா குழு
பெண்கள் கல்வி மற்றும் அதிகாரமளிப்பில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கி வரும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் (KCW), 2026-27 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த இளநிலை மாணவியர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
புதிய மாணவியர்களின் கல்லூரி வாழ்க்கை பயணத்தை வரவேற்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் ஆண்டு மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.
ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். நந்தினி வரவேற்புரையாற்றி, கல்விசார் சிறப்பும் முழுமையான ஆளுமை வளர்ச்சியும் கொண்ட கல்லூரியின் பாரம்பரியத்தை எடுத்துரைத்தார். கல்லூரி செயலாளர் முனைவர் என். யசோதாதேவி புதிய மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களின் கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தினார்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் பி.பி. ஹாரதி கல்லூரியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் மாணவியர் மையப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
காலை அமர்வில் மேற்கு மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளர் ரம்யா பாரதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு,மாணவியர்கள் தன்னம்பிக்கை, நேர்மை,மன உறுதி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சென்னையைச் சேர்ந்த EC Group International நிறுவனத்தின் மனிதவளத் துறை நிர்வாக துணைத் தலைவர் டேனியல் ஜேக்கப், வேலைவாய்ப்புத் திறன்கள் மற்றும் தொழில்முறை உலகின் தற்போதைய எதிர்பார்ப்புகள் குறித்து மாணவியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்திய வாலிபால் வீராங்கனை ஷீபா சுரேஷ், விளையாட்டுத் துறையில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.மேலும் OSI-GAUGE அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரவின் நாயர் மற்றும் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கல்லூரியின் கல்வித் தரம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டி சிறப்பு அங்கீகாரம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் அமர்வில் பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் வனிதா மோகன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு,தலைமைத்துவ பண்புகள், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள மாணவியர்களை ஊக்குவித்தார்.
இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் Startup India (DPIIT) அமைப்பின் தலைவர் மமதா வெங்கடேஷ், புதுமை,தொழில்முனைவு மற்றும் தொடக்க நிறுவனங்களின் வாய்ப்புகளை மாணவியர்கள் ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தித் தொழில்நுட்ப சிறப்பு மையத்தின் (TANCAM) தொழில்நுட்ப துணைத் தலைவர் ராஜா சுப்பிரமணியன், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரியின் உள்தர உறுதிப்பாட்டு மைய (IQAC) ஒருங்கிணைப்பாளர் ஜெ.பாலவிஜயலட்சுமி நன்றியுரை வழங்கினார்.தொடர்ந்து புதிய மாணவியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அறிமுக நிகழ்ச்சி,கல்லூரியின் பண்புகள்,கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புதிய மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது.