September 30, 2020
தண்டோரா குழு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 17 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை கண்டித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தியும், நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்த முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் அபுதாகிர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வகையில் அமைந்திருந்தது. நாடு முழுவதும் விவசாய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்தத் தீர்ப்பு விவசாய சட்டம் விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நெஞ்சில் குத்தியது போல இந்த வழக்கில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் முஸ்லிம்களின் நெஞ்சில் குத்தி இருக்கிறது. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்குகிறது.இந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றார்.