August 4, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, தேனி, மாவட்டங்களில் மழை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு, மேற்கு தென் மேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.