September 21, 2020
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், பேரிடர் கால பாதுகாப்பு முகாம்களும், மீட்பு படை குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரித்துள்ளார்.ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பு முகாம்களுக்கு வந்து தங்கிக்கொள்ளலாம். அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது.பேரிடர் மீட்பு பணிகளுக்காக 45 குழுக்கள், இயந்திரங்கள் மற்றும் 280 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இம்முகாம்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,பொதுமக்கள் தங்களது வீடுகளை சுற்றி ஆபத்தான மரங்கள் இருந்தால் 1077 எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும். மழைப்பொழிவு குறைந்தபோதிலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அதனால், மரங்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியில் வராமல் இருக்க வலியுறுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.