May 6, 2020
மதுக்கடைகளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வயதினருக்கு மது விற்பனை செய்யவேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஊராடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன.
வழக்கமான நேரத்தை விட நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் டாஸ்மாக் கடையை திறந்தால் தனிமனித விலகலை கடைபிடிக்க முடியாது என பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில் கடைகளுக்கு முன்பாக கூட்டம் கூடுவதை தடுக்க வயது வாரியாக வாடிக்கையாளர்கள் வந்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை
40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி
இது தொடர்பாக சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களின் காவல் துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி கடிதம் அனுப்பியுள்ளார்.