August 17, 2020
தண்டோரா குழு
கோவை பேரூர் அருகே நான்கு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதியன்று இரவு சேகர் என்பவருக்கு சொந்தமான TN 37 BU 1563 அசோக் லேலாண்ட் தோஸ்த் வாகனத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் கார்த்திக் என்பவர் பேரூர் காவல் நிலைய சரகம் ஆறுமுக கவுண்டனூரில் அமைந்துள்ள கார்த்திக்கின் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
மறுநாள் காலை வீட்டின் வெளியே சென்று பார்த்த போது வாகனத்தை யாரோ திருடிச் சென்றதை அறிந்து, வாகன உரிமையாளர் சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக 16ம் தேதியன்று சேகர் அளித்த புகாரின் பேரில் பேரூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆண்டியப்பனூரை சேர்ந்த இளவரசன் என்பவரை கைது செய்த போலீசார், திருடப்பட்ட வாகனத்தை கைப்பற்றினர். மேலும் குற்றவாளி இளவரசன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கண்டறிந்து வாகனத்தை கைப்பற்றிய பேரூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டு தெரிவித்துள்ளார்.