• Download mobile app
28 Nov 2025, FridayEdition - 3579
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்முனைவோர்களுக்கு ஏ.ஐ. ஒரு வரம்!‘இன்சைட்’ நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு

November 28, 2025 தண்டோரா குழு

“தரவுகள் அடிப்படையில் ஒரே விதமான வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டு, புதிதாக எந்த சவாலையும் எதிர்கொள்ளாமல் இருப்பவர்களின் வேலைகளை தான் ஏ.ஐ.பறிக்கும். தொழில்முனைவோர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பார்த்து பயப்பட வேண்டாம்.சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் விரைந்து செயல்பட்டால், நீங்கள் கற்பனை செய்தும் பார்க்காத லட்சக்கணக்கான வாய்ப்புகளை ஏ.ஐ வாரி வழங்கும்” என தொழில்முனைவோர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சியில் சத்குரு பேசினார்.

சத்குரு அகாடமி சார்பில் “இன்சைட்” எனும் தொழில் முனைவோர்களுக்கான தலைமைத்துவம் தொடர்பான நிகழ்ச்சியின் 14-ஆவது பதிப்பு, ஈஷா யோக மையத்தில் நேற்று (27/11/2024) தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா,ஐக்கிய பேரரசு(uk), ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி வணிகத்தில் ஈடுபடும் மனிதர்களை அனைத்தையும் அரவணைக்கும் உணர்வுடன் உலகில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சாதனை படைத்த வணிகத் தலைவர்கள் தங்களது வெற்றி அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்வார்கள்.மேலும் தொழில் விரிவாக்கம், சாதனை படைத்த வணிகத் தலைவர்களின் அணுகுமுறைகள் தொடர்பான அமர்வுகள் மற்றும் வெற்றி பெறுவதற்கான முக்கிய கூறுகள் குறித்து தொழில்துறை வல்லுனர்கள் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடுவார்கள். இதனுடன் பங்கேற்பாளர்களுக்கு ஈஷாவின் தியான வகுப்புகளும் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியின் துவக்க நிகழ்வில் பேசிய சத்குரு,

“உலகம் வர்த்தகத்தை மையமாகக் கொண்டதாக மாறியுள்ளது,இயற்கையின் தன்மை, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை நாம் எவ்வாறு நம் தொழில்களை நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமையும் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. இது இராணுவம் அல்லது அரசியலைப் பற்றியது மட்டுமல்ல. நமது தொழில்கள், மக்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. வணிகங்கள் எதிர்காலத்திற்கு உரியதாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் அவைதான் உலகின் முன்னணி விளிம்பாக இருக்கின்றன.” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பேசிய சத்குரு, “ஏஐ மூலம் ‘அறிவுசார் கூலிகளின்’ அதிகாரம் மிக விரைவில் மறையப் போகிறது, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயந்திரத்தால் செய்ய முடியாதவைகளை செய்ய உங்கள் மூளையையும் புத்திசாலித்தனத்தையும் இனி பயன்படுத்த வேண்டும். ‘இயந்திரங்கள் வந்தால் எல்லாம் போய்விடும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் தரவு (Data) சார்ந்த வேலைகள் மட்டுமே போகும்.

குறிப்பாக ஒரே ஒரு வேலைக்கான நேர்காணலைச் சரியாகச் செய்துவிட்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று நினைப்பவர்களுக்குத் தான் இது சவால். நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தால், இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இது நீங்கள் நினைத்துப் பார்க்காத மில்லியன் கணக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

ஒரு தொழில்முனைவோராக நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது, சூழ்நிலைக்கு ஏற்ப விரைந்து செயல்படுவதை தான். மேலும் தொழில்முனைவோர் என்றால் வெறும் பிழைப்பை பற்றி மட்டும் சிந்திக்க கூடாது, வாழ்க்கையை முழுமையாக கொடுத்து புதிதாக ஒன்றை உருவாக்கத் துடிக்கும் ஒரு சாகசக்காரராக இருக்க வேண்டும்.

இந்த ‘இன்சைட்’ நிகழ்ச்சி உங்களை இன்னும் விரைவாகவும், உள்ளார்ந்த பார்வையுடனும், நேர்மையாகவும் மாற்றும் என்று நம்புகிறேன். உங்களின் செயல்களில் நீங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு அடியையும் கேள்வி கேட்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் அறியாமலேயே நேர்மையை இழக்க நேரிடும். கேள்விகளே உங்களை விரைவாகவும், ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களுக்குள்ளும் அழைத்துச் செல்லும்.” எனக் கூறினார்.

இதனையடுத்து பேசிய ஐக்கிய பேரரசின் மேலவையாக இருக்கும் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸின் உறுப்பினர் லார்ட் கரன் பிலிமோரியா, “உங்களிடம் ஒரு நல்ல மற்றும் விசுவாசமான குழு இருந்தால், நெருக்கடி காலங்களில் அவர்கள் உங்களுக்குத் துணையாக நிற்பார்கள். தவறான வழியில் வெற்றி பெறுவதை விட, சரியானதைச் செய்து தோற்பதே மேல்” எனக் கூறினார்.

மேலும் இந்தாண்டு நிகழ்ச்சியில், முக்கிய பேச்சாளர்களாக, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முன்னாள் தலைவர் மாதவி பூரி புச், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைவர் நிதின் பரஞ்ச்பே, கான்ஷியஸ் கேபிடலிசம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் எமரிட்டஸ் ராஜ் சிசோடியா, டைட்டன் கேப்பிட்டலின் இணை நிறுவனர் ரோஹித் பன்சல், டீஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சஷாங்க் குமார் மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் மயக்கவியல் பேராசிரியரும், கான்ஷியஸ் ப்ளானட் சத்குரு மையத்தின் இயக்குநருமான டாக்டர். பாலா சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதற்கு முந்தைய ஆண்டு இன்சைட் நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பயோகான் கிரண் மசும்தார்ஷா, ஜி.எம். ராவ், கே.வி.காமத், அருந்ததி பட்டாச்சார்யா, ஓலா பவேஷ் அகர்வால் உள்ளிட்ட நாட்டின் பிரதான வணிகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்குருவால் நிறுவப்பட்ட சத்குரு அகாடமியின் முதன்மை நோக்கம், தொழில்முனைவோர்களுக்கு உயர்தர தலைமைத்துவ பயிற்சியை வழங்குவதாகும். இது வணிகத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்குவதுடன் ஆழமான உள்ளார்ந்த நல்வாழ்வுக்கான கருவிகளையும் வழங்குகிறது. இதன் மூலம், முழுமையாக மனித ஆற்றலை வெளிப்படுத்தும், தங்கள் உள்ளார்ந்த நிலையில் ஆழமாக வேரூன்றிய தலைவர்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்படுகிறது. இத்தகைய தலைவர்கள், அனைவரையும் உள்ளடக்கிய உணர்விலிருந்து செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள், இது அவர்களுக்கு அவர்கள் சார்ந்த தொழிலில் மிகவும் துல்லியமான முடிவுகளையும் எடுக்கவும் பயனுள்ள செயல்களை மேற்கொள்ளவும் உதவுகிறது.

மேலும் படிக்க