July 30, 2020
தண்டோரா குழு
தேவாரம் பற்றி தவறாக பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்ந்த சிவத்தொண்டர் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தேவாரம் பற்றி தவறாக பேசியதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேச்சாளர் சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோவையை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் மனு ஒன்றை மாநகர காவல் துறை ஆணையரிடம் வழங்கியுள்ளார்.
சிவத்தொண்டரான அவர் அளித்துள்ள மனுவில், தமிழ் வேதம் திருமுறைகள் ஓதுவாமூர்த்திகளால் அனுதினமும் பாடப்பட்டு வருகிறது. இப்படி பேரமுதமாக விளங்கி வரும் திருஞானசம்பந்தர் தேவாரம் குறித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சாளர் சுந்தரவள்ளி என்பவர் தொலைக்காட்சி விவாதத்தில் மிகவும் தவறாக பேசி உள்ளார். மேலும் ஞானசம்பந்தப் பெருமான் , பெண்களை தரக்குறைவாக பேசியதாக அவர் விமர்சித்துள்ளார். ஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்தில் வாழ்க்கை நெறி ? எப்படி வாழ வேண்டும் ? உயர் வாழ்வு , ஞானம் போன்றவைகளே காணப்படுகிறது நாள்தோறும் தேவாரம் பாடும் என்னைப்போன்ற சிவனடியார்களுக்கு சுந்தரவள்ளியின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சாளர் மீது சிவத்தொண்டர் அளித்துள்ள மனுவால் கோவையில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.