• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தள்ளிப்போகும் நீட் கலந்தாய்வு – கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

December 2, 2021 தண்டோரா குழு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனையில் டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தற்போது கலந்தாய்வை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவா்கள் கூறுகையில்,

“முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும்.இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பா் மாதம் தான் நீட் தோ்வு நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன.

அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. நீட் தோ்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனா்.

கலந்தாய்வு நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 2,500 போ் உட்பட இந்தியா முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் முதுநிலை படிப்புகளில் சோ்ந்திருப்பாா்கள். முதுநிலை படிக்கும் மாணவா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவாா்கள்.

இந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவா்கள் வராததால், ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு பணி சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க