June 27, 2026
தண்டோரா குழு
உலகளவில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் முன்னணி இலாப நோக்கமற்ற அமைப்பான அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்,கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தமிழ் நாட்டில் முதல் ‘காம்பிரஹென்சிவ் செஸ்ட் பெயின் சென்டர்’ (Comprehensive Chest Pain Center) என்ற சர்வதேச சான்றிதழை வழங்கியுள்ளது.
மாரடைப்பு நோயாளிகள் உயிர் காக்கும் சிகிச்சையை உரிய நேரத்தில் பெறுவதில் ஏற்படும் தாமதங்களை குறைத்து, உடனடி மற்றும் மேம்பட்ட இதய சிகிச்சையை வழங்குவதில் மருத்துவமனை வகிக்கும் முக்கிய பங்கிற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதை வெளியீடு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார்,தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜகோபால்,மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன் மற்றும் இதயவியல் துறையின் மூத்த மருத்துவர்கள்,ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில்,30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களிடையே ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 36% சதவீதம் இதய மற்றும் இரத்த நாள நோய்களால் (Cardiovascular Diseases) ஏற்படுகின்றன. மேலும், சமீபத்திய தரவுகளின்படி, மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் 12.5 சதவீதம் அதிகரித்து வருகின்றன. இதய நோய்களின் அதிகரித்து வரும் பாதிப்பு, குறிப்பாக எஸ்.டி. பிரிவு உயர்வுடன் கூடிய மாரடைப்பு (ST-Elevation Myocardial Infarction – STEMI(மாரடைப்பு)) எனப்படும் மிகவும் தீவிரமான மாரடைப்பு வகைக்கான சிகிச்சையை தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் காம்பிரஹென்சிவ் செஸ்ட் பெயின் சென்டர் சான்றிதழ், STEMI (மாரடைப்பு) நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் கடுமையான சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. மாரடைப்பை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிந்து, மேம்பட்ட இதய சிகிச்சைகளை உடனடியாக வழங்கும் திறன் கொண்ட மருத்துவமனைகளுக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
காம்பிரஹென்சிவ் செஸ்ட் பெயின் சென்டர் என்பது மிகவும் தீவிரமான மாரடைப்பு வகைக்கான சிகிச்சை. நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான நிபுணத்துவம், உட்கட்டமைப்பு மற்றும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட மையமாகும். இதில், இதயத் தமனிகளில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் உயிர் காக்கும் சிகிச்சை முறையான பெர்கியூட்டேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (Percutaneous Coronary Intervention – PCI), பொதுவாக ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) என அழைக்கப்படும் சிகிச்சை வசதி இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இத்தகைய சான்றிதழ் பெற்ற மையங்கள், ஆதாரப்பூர்வ மருத்துவ வழிகாட்டுதல்கள் (Evidence-based Clinical Protocols), தொடர்ச்சியான தர மேம்பாட்டு செயல்முறைகள் மற்றும் நெஞ்சுவலியுடன் வரும் நோயாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலும் சிறந்து விளங்க வேண்டும்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் சர்வதேச குழுவின் இணைத் தலைவர் கூறுகையில்,
“இன்றும் உலகளவில் இதய நோய் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக உள்ளது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது. மருத்துவமனைகளும், சுகாதார சேவை வழங்குநர்களும் மிக விரைவாகவும் திறம்படவும் சிகிச்சையை ஒருங்கிணைக்கத் தயாராக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்துவதற்காகவே காம்பிரஹென்சிவ் செஸ்ட் பேயின் சென்டர் சான்றிதழ் உருவாக்கப்பட்டது. இது மருத்துவமனைகள் ஒருங்கிணைந்த இதய சிகிச்சை முறையை உருவாக்கவும், இதய நோயாளிகளுக்கான சிகிச்சை முடிவுகளை மேம்படுத்தவும், STEMI மற்றும் என்.எஸ்.டி.இ.எம்.ஐ. (Non-ST Elevation Myocardial Infarction – NSTEMI) நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை வழங்கவும் உதவுகிறது” என்றார்.
இந்த சான்றிதழ் திட்டத்தின் மூலம், மாரடைப்பு அறிகுறிகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரித்தல், உரிய நேரத்தில் மருத்துவ உதவியை நாட ஊக்குவித்தல், உயிர் காக்கும் சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதங்களை குறைத்தல் மற்றும் சிகிச்சையின் துல்லியத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாகக் குறைப்பதே அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் நோக்கமாகும்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,
“இந்த சான்றிதழ், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், எங்களது இதயவியல் துறைக்கு பெருமை சேர்க்கும் சாதனையாகவும் அமைகிறது. மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம், மருத்துவ நிபுணத்துவம் மற்றும் சர்வதேச தரநிலைகளை ஒருங்கிணைக்கும் சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான எங்களது உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் உரிய நேரத்தில், ஆதாரப்பூர்வமான, மிக உயர்ந்த தரத்திலான இதய சிகிச்சையை வழங்குவதே எங்களது முதன்மை நோக்கமாகும்” என்றார்.