• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் முதல் முறையாக 16 திருநங்கைகள் இணைந்து நடத்தும் “ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்”

June 30, 2022 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கைகள் நிலையை உயர்த்த ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Downtown) சார்பில் 16 திருநங்கைகள் இணைந்து நடத்தும் “ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்” துவக்கபட்டுள்ளது.

வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் மனித குலம் எடுக்கும் முடிவுகளில் தான் உள்ளது. இந்த உலகத்தில் தேவை கூடி வாழ்தல் தான். வீட்டை விட்டு துரத்தப்பட்டு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, சில வலுவான சக்திகளின் ஒடுக்கத்தால் திருநங்கைகள் சமூகம் ஒன்றாக கூடி வாழ்கின்றனர். இவர்களில் சிலர் ஆண்களையும் பெண்களையும் போன்று, புத்திசாலித்தனமாகவும் கசப்பான அனுபவத்தோடும் தங்களது சூழல்களால் போராடி வாழ்கின்றனர்.

அவர்களது மவுனம் சொல்லும் தகவல், எல்லாவற்றுக்கும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது தான்.இவற்றையெல்லாம் தகர்க்க திருநங்கைகள்,பாலின சட்டங்கள் சர்வதேச அளவில் உள்ளன.அதோடு, இவர்களுக்கு பெருமை மிகு மாதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அனுசரிக்கப்பட்டு, சரிசம நீதியும், உரிமையையும் வழங்குகிறது.இதன் ஒரு புதிய முயற்சியாக தமிழ்நாட்டில் முதல்முறையாக ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Downtown) மேற்கொண்டு, “ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்” (Rotaract Club of TransMom) ஒன்றை துவக்கியுள்ளது.இந்த கிளப்பில் தற்போது 16 திருநங்கைகள் இணைந்துள்ளனர்.

இவர்களின் மதிப்பை உயர்த்த இன்னும் பலர் இணைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.இந்த கிளை துவக்க விழா, மாவட்ட ரோட்டரி கிளப் ஏற்பாட்டில், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் டெக்ஸிட்டி ஹாலில் நடந்தது. ரோட்டரி கவர்னர் ராஜசேகரன் ஸ்ரீனிவாசன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். ரோட்டரி மாவட்ட 2022-23 இளைர்கள் சேவை பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம் வாழ்த்துரை வழங்கினார்.

மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி கீர்த்தி விவேக், 2022-23 உதவி கவர்னர் சுமித் குமார் பிரசாத் பங்கேற்றனர்.டிரான்ஸ்மாம் ரோட்ராக்ட் கிளப்புக்கு சர்வதேச ரோட்டரி கிளப் அங்கீகாரம் பெற அயராத முயற்சியை மேற்கொண்ட 2021-22 தலைவர் கேப்டன் பாலாஜி பாபு,அவரது துணைநின்ற 2022 -23 தலைவர் சுந்தரேசன், 2021-22 செயலாளர் ஷியாம் மற்றும் 2022-23 செயலாளர் குமரன் ஆகியோரும் புதிய ரோட்டராக்ட் கிளப் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

இதுகுறித்து ரோட்டரி மாவட்டம் இளையர் சேவை பரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில்,

“திருநங்கை தன்ஷிகா, கடின உழைப்பாளி. அவர், டிரான்ஸ்மம் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர் மற்றும் தலைவராகவும் உள்ளார். முதுநிலை பட்டம் பெற்ற அவர், கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். டிரான்ஸ்மாம் பவுண்டேஷனில் ஒரு அறங்காவலராக உள்ள அவர், திருநங்கைகளின் தேவைகளை அறிந்து உதவி வருகிறார்,” என்றார்.

மற்றுமொரு உறுப்பினரான திருநங்கை அனுஷ்யா, டிரான்ஸ்மாம் ரோட்டராக்ட் கிளப்பின் செயலாளராக உள்ளார். ஊக்கமும் ஆற்றலும் கொண்ட இவர், சுய கட்டுப்பாடு மிக்கவர். சமையல் பணியில் தொடங்கி, தன்னம்பிக்கை பெற்று,ஓட்டுநராகவும்,தொழில் முனைவோராகவும் மாறியுள்ளார். திருநங்கைகளின் தூணாக திகழ்ந்து உதவிட உழைத்துக் கொண்டிருக்கிறார்.

திருநங்கைகள் அனுஷ்யா மற்றும் தன்ஷிகா ஆகியோர், பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழும் இரட்டையர்களாக மாறியுள்ளனர். அனுஷ்யா, பலருக்கு வாகனங்களை ஓட்ட கற்றுக் கொடுத்து ஓட்டுனராக மாற்றியுள்ளார். அவர்கள் மதிப்பும் மரியாதையும் பெற்று பொருளீட்டி வருகின்றனர். திருநங்கை சங்கீதாவும் உபர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த முயற்சிகளை மாவட்ட ரோட்டரி பிரதிநிதி கீர்த்தி விவேக், காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் காருண்யா ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

ரோட்டரி மாவட்டம் 3201 கிளப்பில் 160 கிளப் உறுப்பினர்களாக உள்ளது. ஒவ்வொரு கிளப்பும், புதிய திட்டங்களை டிரான்ஸ்மம் கிளப்புடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளன. 2022 – 2023 ரோட்டரி கவர்னர் ராஜ்மோகன் நாயர், “ஐ” என்பதை, ரெயின்போ விப்கியார் திட்டத்துடன் துவக்கி நடத்தி வருகிறார். இந்த திட்டம், உடலாலும், உள்ளத்தாலும், பொருளாதாரத்திலும் மற்றும் சமுதாயத்திலும் பாதிக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று நடத்தப்படுகிறது. ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன், சவால்களில் உள்ள ஒவ்வொரு தனிநபர்களுக்கும் சமமான வாய்ப்பளித்து, அவர்களை உடன் இணைத்து செயல்பட்டு வருகிறது.

பொது இடங்களில் திருநங்கைகளுக்கான கழிப்பறைகள், திறன்மேம்பாட்டு பயிற்சிகள், சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு, அவர்களை போன்ற வீடுகளில் இருப்போருக்கும் சமுதாய பாதுகாப்பினை ரோட்டரி கிளப்புடன் இணைத்து செயல்படுத்துதல், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் கிரிக்கெட், சிறை சென்று திரும்பியோருக்கு மறுவாழ்வு அளித்தல், எளியவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குதல், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு நீண்ட கால மருத்துவ உதவி வழங்குதல் போன்றவைகளையும் செயல்படுத்தி வருகிறது ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன்.

டிரான்ஸ்மாம் பவுண்டேஷன் மற்றும் ரோட்ராக்ட் கிளப்புகள் இணைந்து, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மளிகை பொருட்கள் அளித்தல், தொழில் மற்றும் கலை திறன் மேம்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றனர். திருநங்கையர்களில் 50 உறுப்பினர்களுக்கு முதலுதவி பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, ஒரு நிலையான இடத்தை அமைத்து, சமுதாயத்தில் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ உதவிட ரோட்டரி கிளப் டவுன்டவுன் முடிவு செய்துள்ளது. இதில் ஒரு உறுப்பினருக்கு திருநங்கைகளுக்கு நட்பான ஒரு உணவு விடுதியை ஏற்படுத்தி தரவும் முடிவு செய்துள்ளது.

டிரான்ஸ்மாம் பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி கிளப் உதவியுடன், கோவையிலும், அதை சுற்றியும் உள்ள பகுதிகளில் பல திருநங்கைகள் சமுதாயத்தை சேர்ந்த ஏழ்மையில் இருப்போருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பும், வாய்ப்புகளும் அளித்து, அவர்கள் வாழும் பகுதிக்கு அனுப்பி, அவர்களது தேவைகளை அறிந்து வாழ வழி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க