• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து

May 10, 2019 தண்டோரா குழு

தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என கவிஞர் வைமுத்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அறிக்கையில்,

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம்.தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா?

தொழிற்கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கல்வியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டாம்; இந்த விஷச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்துவிடுங்கள். தமிழில் இரண்டாம் தாள் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித்திறனும் இரண்டாம் தாளில்தான் வினைப்படுகின்றன. கண்களில் ஒன்றுபோதும் என்று ஒன்றைக் களைந்துவிடுவீர்களா? பள்ளிக் கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பதற்கு மாறாக அதன் அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.

தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன்முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க