• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் !

December 28, 2018 தண்டோரா குழு

தமிழக லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர், அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டுவரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, லோக் ஆயுக்தா குறித்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியதற்கான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழை வெளியிட்டது. லோக் ஆயுக்தா செயலாளர், இயக்குனர், சார்பு செயலாளர், பதிவாளர், சார் பதிவாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என 26 பணியிடங்களை உறுதி செய்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் இடம்பெற்றிருப்பர். இந்த 3 பேர் கொண்ட தேர்வுக் குழுவானது, தகுதிவாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக சர்ச் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமிக்கும். இந்த தேடுதல் குழுவானது தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, தேர்வுக் குழுவிடம் வழங்கும். பின்னர் தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.
இதையடுத்து, இந்த நடைமுறையின் முதல் நடவடிக்கையாக, தேடுதல் குழுவை தேர்வு செய்வதற்கான, தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பங்கேற்க முடியாது என மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பின் தமிழக லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற
ஐபிஎஸ் அதிகாரி பாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க