June 9, 2020
தண்டோரா குழு
கொரணா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழக-கேரள எல்லையில் சாலையில் வைத்து குறைவான நபர்களுடன் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. கேரள தமிழகத்திலும் எல்லை கடக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூணாறு மாட்டு பட்டியைச்சேர்ந்த சேகர்- சாந்தா தம்பதியின் மகள் பிரியங்கா , கோயம்புத்தூர் சரவணம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி பாக்கியத்தாய் தம்பதிகளின் மகன் ரோபின்சன். இவர்களுக்கு திருமணம் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி மாட்டுப்பட்டியில் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. வைரஸ் பீதியை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் எல்லைப்பகுதி மூடப்பட்டதும் திருமணம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு திருமணம் நடத்தலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இருந்தாலும் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வந்ததாலும் எல்லைப்பகுதி தொடர்ந்து மூடப்படும் என்ற அச்சம் இருந்ததாலும் இன்று முகூர்த்த நாளில் திருமணம் நடத்தி வைக்கலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இதையடுத்து, தமிழக கேரள தற்போதைய கட்டுப்பாடு சட்டத்தின்படி அனுமதி பெற்று கேரள – தமிழக எல்லையான சின்னாறில் நடு ரோட்டில் வைத்து இருவரின் திருமணமும் நடைபெற்றது. சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இலக்கிய மணி திருமணத்தை நடத்தி வைத்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் மணமகளை மணமகன் எல்லை கடந்து கோயம்புத்தூரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமிழக கேரள எல்லையில் நடுரோட்டில் நடந்த திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.