April 15, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக உள் மாவாட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில்
” தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இந்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
இந்த தாழ்வுப் பகுதி தமிழகத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். இந்த வெப்ப சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது ” என்றார் பாலசந்திரன்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான சென்னை, கடலூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.