• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

March 16, 2019

தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் தேர்தலை சந்திக்கிற நிலை உருவாகியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து வருகிற தேர்தலுக்காக தற்காலிகமாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கப் போவதில்லை. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுகிற அமோக ஆதரவு பெற்றிருக்கிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடி மாநிலமாக தமிழகம் அணி திரண்டு நிற்கிறது.பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வேண்டுமென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பே முதன் முதலாக முன்மொழிந்து தேசிய அரசியலுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். இந்தப் பின்னணியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஒருமித்த உணர்வுடன் எழுச்சியோடு தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவின் எதிர்கால பிரதமராக முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து ஏதாவது ஒரு பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இந்த வேண்டுகோளுக்கு மதச்சார்பற்ற கூட்டணி பேராதரவு வழங்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மதம், ஜாதி, எல்லைகளைக் கடந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய மகத்தான தலைவராக விளங்குகிற ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டும் சொந்தமுள்ளவராக கருத முடியாது. அவர் இந்திய மக்களின் சொத்தாக கருதப்படுகிறவர். அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற, நல்லிணக்க கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

அவர் வடக்கே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற அதே நேரத்தில் இந்தியாவின் தென் பகுதியாக விளங்குகிற தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று லட்சோபலட்சம் மக்களின் சார்பாகவும், மதச்சார்பற்ற சக்திகளின் சார்பாகவும் அவரை அன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்களின் வேண்டுகோளை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்புகிறேன். இத்தகைய போட்டியின் மூலம் வடக்கையும், தெற்கையும் இணைத்து நிற்கிற எழுச்சித் தலைவராக ராகுல்காந்தியை கருதி இந்திய மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்பது உறுதியாகும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்

மேலும் படிக்க