May 16, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் என்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இன்று 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து,சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்தது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களைத் தவிர்த்தால் தமிழகத்தில் மட்டும் இன்று 384 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்திலிருந்து விமானம் மூலம் வந்த 4 பேருக்கும், மகாராஷ்டிரத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 81 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 7 பேருக்கும், ஆந்திரத்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 93 பேருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.67% ஆக கட்டுக்குள் உள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் மொத்தம் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,538 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 10,535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம், இங்கு மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,13,639 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கூறினார்.