June 22, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிக பட்சமாக சென்னையில் 1,487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 42,752 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றல் இன்று 37 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1,358 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34112 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தினமும் 30,000 பரிசோதனை எடுக்கும் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே, கொரோனாவில் இருந்து அதிகம் பேர் குணமடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வதற்கு 15 – 17 நாள் வரை ஆகிறது.கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 55% பேர் குணமடைந்துள்ளனர். ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வீரியமிக்க மருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. முதலமைச்சருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்றார்.