August 1, 2020
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் குறித்து சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 500கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இதில் தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 89 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் 10 கல்லூரிகள் கோவையில் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என உலா வந்தது.
இதனையடுத்து தவறான தகவல்கள் பரப்பபட்டு வருவதாக தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கபட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்க் பொறியியல் கல்லூரிகளின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி ,
இந்த விவகாரம் கடந்த வருடம் முதலே பரப்பபட்டு வருகிறது எனவும் இது தவறான தகவல் என தெரிவித்தார். மேலும் இது குறித்து அண்ணா பல்கலை மறுப்பு தெரிவித்ததோடு விளக்கமும் அளித்துள்ளது என்றார். கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது இவ்வாறு தவறான செய்திகளை சமூக வலை தளங்களில் பதிவு செய்ததாகவும் இந்த வருடமும் இதனை சிலர் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் புகார் மனு அளித்து வருவதாக தெரிவித்த அவர் சைபர் கிரைம் மூலம் இவ்வாறு தவறான தகவல்களை பரிமாறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து உள்ளதாகவும் இது போன்ற செயல் குற்றவியல் நடவடிக்கை என்றும் இதனை பார்வார்டு செய்வதும் குற்றமே என்றார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி அளித்ததாகவும் அப்போது தெரிவித்தார்.