December 25, 2018
தண்டோரா குழு
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி தந்தையில்லாமலிருக்கும் ஏழைப் பெண்களுக்கு 2012-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 6 வருடங்களாகத் திருமணம் செய்து வைத்து வருகிறார்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மஹேஷ் சவானி. வைர வியாபாரியான மஹேஷ் சவானிக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு முன்பே மஹேஷ் சவானியின் தந்தை உயிரிழந்துள்ளார். தந்தை இல்லாமல் மஹேஷ் சவானியின் திருமணம் நடைப்பெற்றது. இதனால் குஜராத்தில் தந்தை இல்லாமல் ஆதரவுற்று உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து 2012-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 6 வருடங்களாகத் தந்தையில்லாமலிருக்கும் ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் இந்த வருடம் நேற்றைக்கு முந்தைய தினம் 261 பெண்களுக்கு மஹேஷ் சவானியின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. சூரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மஹேஷ் ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்தது பல பெண்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.
இதில் அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடைபெற்றது. மொத்தம் 261 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளி 2 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள்.
திருமண நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இதுவரையில் ஆறு ஆண்டுகளில் 1,300 பேருக்கு தொழிலதிபர் மஹேஷ் சவானி திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.