December 1, 2025
தண்டோரா குழு
கோவைப்புதூர் அறிவொளி நகர் எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள் தண்ணீர் வசதி கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவைப்புதூர் அறிவொளி நகர் எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் 512 வீடுகள் உள்ளன .இதில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதும் கிடைப்பதில்லை என நாம் தமிழர் கட்சி மதுக்கரை பொறுப்பாளர் சித்திரை செல்வன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் அசோக்குமார் முன்னிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
நாங்கள் கடந்த ஏழு வருடங்களாக எம்.ஜி.ஆர் குடிசை மாற்று வாரியம் கொடுத்த குடியிருப்பில் வசித்து வருகிறோம். இந்த குடியிருப்பில் எங்களது அன்றாட தேவையான தண்ணீர் வசதி போதுமான அளவு இந்த குடியிருப்புகளுக்கு கிடைப்பதில்லை. தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் எங்கள் குழந்தைகள் அன்றாட தேவைகளான குளியல் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
இதனால் அவர்களால் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.இந்த பிரச்சனையைக் குறித்து குடியிருப்பு வாசிகளாகிய நாங்கள் மதுக்கரை நகராட்சிக்கு சென்று மனு கொடுத்தோம். மதுக்கரை நகராட்சியில் எங்களை இப்பொழுது வா,அப்பொழுது வா என அலைகழித்து வந்ததுடன் கடைசியாக எங்களை வீட்டு வசதி வாரியத்தில் தெரிவிக்கும்படி கூறினார்கள்.அங்கு சென்று எங்களது தண்ணீர் பற்றாக்குறையை பற்றியும் , எங்களது வீடுகளுக்கு வீட்டு வரி ஏற்படுத்திக் கொடுக்கும்படியும் மனு பலமுறை கொடுத்தோம் இதுவரை மதுக்கரை நகராட்சியும்.குடிசை மாற்று வாரியமும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இன்று மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்
மேற்கண்ட எங்களது கோரிக்கைக்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எங்களது குழந்தைகளின் நலனையும், கல்வியையும் உத்தேசித்து எங்களது குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் போதுமான அளவு தண்ணீர் வசதி கிடைக்கவும்,எங்களது வீடுகளுக்கு வீட்டு வரி ஏற்படுத்தி கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.