• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தடாகத்தில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

September 13, 2019 thandoraa

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அனுமதியில்லாமல் இயங்கும் செங்கல்சூளைகள் மற்றும் விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர், கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.செங்கல்சூளைகள் மாசு கட்டுப்பாட்டின் அனுமதியில்லாமலும், முறைகேடாக மின் இணைப்பு பெற்று இயங்கி வருவது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் 204 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.செங்கல் சூளைகளுக்கான செம்மண் சுற்று வட்டார கிராமங்களில் தோண்டி எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. விளை நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டுமின்றி நீர் நிலைகளையும் விட்டு வைக்காமல் மண் வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது. கனிமவள விதிப்படி அனுமதி பெற்ற அரசு நிலங்களாக இருந்தாலும், தனியார் நிலங்களாக இருந்தாலும் 3 அடி ஆழத்திற்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும்,கனரக வாகனங்களை பயன்படுத்த கூடாது, பக்கத்து நிலங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் போதிய இடைவெளியில் மண் எடுக்க வேண்டும்,குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன. நிலங்கள் இருந்த இடங்கள் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி வருவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, விவசாயமும் முடங்கியுள்ளது.

நிலம் மற்றும் நீர் வளம் மிகுந்த பகுதியில் 20 அடி முதல் 150 அடி வரை தோண்டி செம்மண் எடுக்கப்படுவதால், ஊர் முழுக்க பள்ளங்களாகவும், குழிகளாகவும் மாறியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த கனிம வள கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். மாசு, புகை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது எனக்கூறிய கிராமவாசிகள், இதுதொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து சூழல் ஆர்வலர் கணேஷ் கூறுகையில்,

அனுமதியில்லாமல் இயங்கும் செங்கல்சூளைகளாலும்,விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதால் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 40 நாட்களில் 4 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் இறப்பிற்கான முழுமையான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிம வளக்கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா என்பதே பல தரப்பினரின் கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க