October 1, 2020
தண்டோரா குழு
டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பெறப்பட்ட கடிதத்தின் மேல், நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.அதில் கடந்த 26ம் தேதியன்று கடை எண் 1716 மற்றும் 1597 ஆகிய மதுபான கடைகளை ஒட்டியுள்ள மது கூடங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், பணி முடிந்து வெளிவந்த ஊழியர்களை எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் குற்றவாளிகளை போல் நடத்தியதாகவும்,டாஸ்மாக் ஊழியர்கள் மீது மிரட்டி பெறப்பட்ட கடிதத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என வலியுறுத்தி இருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
17 ஆண்டுகளாக பணி நிரந்தரம் இன்றி கொரோனா பெருந்தொற்று உள்ள நிலையில், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருவதாகவும், ஐந்து நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற அரசின் அறிவிப்பு மதுக்கூடங்களில் உதாசீனம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.அதேபோல, டாஸ்மாக் கடைககளை ஒட்டி இருக்கும் மதுக்கூடங்கள் சுய லாபத்திற்காக விதிமுறைகளை மீறி செயல்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பாதுகாப்பற்ற சூழலில் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஊழியர்களை மிரட்டி காவல்துறையினர் கடிதம் பெற்றதாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் நியாயமானதல்ல எனவும் தெரிவித்தனர்.
மேலும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவர்கள், இதுபோன்ற விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.