September 18, 2017
தண்டோரா குழு
டோக்யோ,
இர்மா புயலை அடுத்து பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள தலிம் புயல் ஜப்பான் நாட்டை தாக்கியது.
அட்லாண்டிக் கடலில் உருவாகிய இர்மா புயல் கரீபியன் தீவுகளையும் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தையும் கடுமையாக தாக்கியது. இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர், பலர் உயிரிழந்தனர்.
இர்மா புயலின் தாக்கம் அடங்குவதற்கு முன், பசிபிக் பெருங்கடலில் தலிம் புயல் உருவாகி ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள க்யுஷு தீவுகளை தாக்கியது.
இதையடுத்து, அங்கு பலத்த காற்றும் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஜப்பான் நாட்டின் க்யுஷு, ஷிக்கொகு மற்றும் சுகோகு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் சுமார் 77௦ உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விரைவு ரயில்கள், உள்ளூர் ரயில்கள் மற்றும் படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டின் பல பகுதிகளில் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன.
தெற்கு ஜப்பான் கடல்பகுதியில் பலத்த மழையும், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவு மற்றும் கடலில் உயர் அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. அதனால் கடலோரப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.