September 14, 2017 
தண்டோரா குழு
                                கோவை சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று நேரில் விசாரணை செய்தார்.
கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கோவை சூலூர் அருகே உள்ள சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட் சுவர் இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். 
இவ்விபத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தக்க விசாரணை மேற்கொள்ளும் பொருட்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் பொருட்டு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடியை ஒரு நபர் விசாரணைக் குழுவாக தமிழக அரசு நியமித்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணையானது கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 15) நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை விசாரணை குழுவிடம் நேரிலோ அல்லது மனுவாகவோ அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.