July 25, 2020
தண்டோரா குழு
கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் மூலம் கஞ்சா விற்றுவந்த 2 பேரை அடுத்தடுத்து கைது செய்த துடியலூர் போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை துடியலூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் செல்போன் மூலம் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக துடியலூர் காவல் ஆய்வாளருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அவர்களின் எண்களை கண்டறிந்து கஞ்சா வாங்குவது போல பேசி அவர்களை வரவழைத்து 2 நாட்களில் 2 பேரை கைது செய்தார் துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம். விசாரணையில் செல்போன் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரும் கவுண்டம்பாளையம் அசோக்நகர் கீழ்பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் சசிக்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அதேபகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த பிரபல கஞ்சா வியாபாரி சொக்கன் என்பவனிடம் இருந்தவர்கள் என்பது தெரியவந்தது.
லோகநாதனிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவும், சசிகுமாரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பரிமுதல் செய்த துடியலூர் காவல் ஆய்வாளர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தார்.