September 29, 2020
தண்டோரா குழு
சென்னை உட்பட நாட்டின் மூன்று நகரங்களில் புதிதாக என்.ஐ.ஏ அலுவலகம் அமைக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதலை அளித்துள்ளது.
என்.ஐ.ஏ எனப்படும் தேசிய விசாரணை முகமை பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது.கவுஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்பூர், சண்டிகர் என நாட்டின் ஒன்பது நகரங்களில் என்.ஐ.ஏ அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மத்திய அரசின் இந்த முடிவு குறிப்பிட்ட மாநிலங்களில் பயங்கரவாத தடுப்பு விசாரணையைத் துரிதப்படுத்த உதவும். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் என்.ஐ.ஏ. விசாரணைத் திறனை வளர்த்தெடுக்கவும், குற்றங்களின் தடயங்களை விரைவில் சேகரிக்கவும் என்.ஐ.ஏ. அலுவலகம் இந்த மாநிலங்களில் இருப்பது உதவிகரமாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.