May 5, 2020
தண்டோரா குழு
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவுவதற்கு என்ன காரணம் என முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைப்பு; மாவட்ட ஆட்சியர்களுடன் இதுவரை 4 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறது.
சென்னையில் கொரோனா வேகமாக பரவ காரணம் குறுகிய தெருக்கள், மக்கள் தொகை அதிகம் உள்ளிட்ட காரணங்களால்தான். சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அதிக மக்கள் கொண்ட பகுதி என்பதால் சென்னையில் வேகமாக கொரோனா தொற்று பரவுகிறது.
சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது . தமிழகம் முழுவதும் 50 மையங்கள் மூலம் தினமும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை ஒரு வாரத்திற்குள் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மா உணவகம் மூலமாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம்.
ரேஷன் கடைகளில் ஜூன் மாதமும் விலையில்லாமல் பொருட்கள் வழங்கப்படும்.கொரோனாவை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றார்.