June 20, 2020
தண்டோரா குழு
சென்னையில் இருந்து உரிய அனுமதி இன்றி பணியாளர்களை கோவை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியதால் GRT நகைக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
கோவை கிராஸ்கட் ரோட்டில் GRT நகைக்கடை செயல்பட்டு வருகிறது. சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அங்கு பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அங்கு சென்ற போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னையில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள ஜிஆர்டி நகைக்கடையில் பணி புரிவதற்காக அனுமதியின்றி அழைத்து வரப்பட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்தின் 3 தளங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட 30 பேரையும் பரிசோதிக்க மருத்துவர் குழு முடிவு செய்துள்ளது. இதனால் 30 ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு வழிகாட்டுதலை மீறி அதிகமான பணியாளர்களை கொண்டு GRT நிறுவனம் இயங்கியதால் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு கடைக்கு காவல்துறையினர் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.