June 19, 2020
தண்டோரா குழு
சூலூரில் ஹார்டுவேர்ஸ் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் உள்ள வெங்கடேஷ் என்பவரது ஹார்டுவேர்ஸ் கடையில் கடந்த 8 ம் தேதி 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. இதுதொடர்பாக சூலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று தென்னம்பாளையம் பகுதியில் நின்றிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து போலீசார் விசாரினை மேற்கொண்டபோது அவர் முன்னுக்கிப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தான் ஒரு ஆதரவற்றோர் பெயர் காசி (19) என்பதும் தனது தந்தை தான் சிறுவனாக இருக்கும் போதே இறந்து விட்டதால் தாய் தன்னை அனாதையாக விட்டு சென்று விட்டதாக தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தாக கூறிய அவர் கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பூருக்கு வந்ததாக கூறியுள்ளார். திருப்பூரில் இருந்து பல்வேறு திருட்டுகளை செய்துள்ளதாகவும் தன்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.கடந்த 8ம் தேதி நீலம்பூர் பகுதியில் உள்ள கடையில் மேற்கூறையை உடைத்து 4 லட்சத்து 50 ஆயிரம் திருடியதாகவும் அதில் ஜாலியா 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.அவரிடமிருந்து 4 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த போலீசார் அவரைக் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.