May 29, 2020
தண்டோரா குழு
சிறுவாணி அணைக்கு தமிழக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.
கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் சிறுவாணி நீர் அணைப்பகுதியில் நிரந்தர நீர் இருப்பு பகுதியில் உள்ள குழாய்களை கேரள நீர்ப்பாசன அதிகாரிகள் தமிழக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தெரிவிக்காமல் வால்வுகளை அடைத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சிறுவாணி அணை பராமரிக்கும் பொறுப்பு முழுதும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் சார்ந்தது.ஆனால் கேரள நீர்ப்பாசன அதிகாரிகள் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வருகின்ற சிறுவாணி நீரை தடுத்து நிறுத்த முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் 30 க்கு மேற்பட்ட மாநகராட்சி வார்டுகள் உட்பட 22 கிராமங்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை சிறுவாணி அணைக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய உரிமையான நீரினை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியினர்,
சிறுவாணி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்கள் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இரண்டு முறை முயற்சி எடுத்து கைவிட்டுள்ளனர். மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை கேரள அரசு கைவிட வேண்டும்.