September 9, 2020
தண்டோரா குழு
ஈரோடிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரதிரற்கு ஜவுளிகளை பார்சல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட்டில் இருந்து கருமத்தம்பட்டி டோல்கேட் வந்த பிறகு லாரியை டிரைவர் சோதனை செய்துள்ளார். அப்போது லாரியின் கயிறுகள் அவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் மேலே ஏறி சோதனை செய்து பார்த்தபோது தார்ப்பாய்கள் அனைத்தும் முழுவதுமாக கிழிக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. பண்டல்கள் கிழிந்து இருப்பதை பார்த்து டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.
திருடர்கள் லாரி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது சினிமா பட பாணியில் ஏதோ ஒரு வாகனத்தில் பின்புறமாக வந்து ஓடும் லாரியில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பொழுது அவர்கள் இது எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போய் இருக்காது எனக் கூறி எஃப்ஐஆர் எடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தாங்கள் அவினாசியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனால் கலக்கமடைந்த ஓட்டுனர் என்ன செய்வது அறியாது திகைத்து அங்கேயே நின்று கொண்டிருக்கிறாராம்.