October 3, 2020
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே வீட்டில் தனிமையாக வசித்து வந்த முதியவர் கிருஷ்ணசாமி (83) என்பவரை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்துள்ள சாக்கோட்டை சேர்ந்தவர் விக்ரம் (27) பல கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிறை சென்றுள்ளார்.அங்குள்ள கூட்டாளியுடன் நடத்திய ஆலோசனையில் கோவை சிங்காநல்லூரில் தனிமையில் வசிக்கும் முதியவரிடம் ஏராளமான பணம் நகைகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியில் வந்த விக்ரம் தனது கூட்டாளி செல்வகணபதியுடன் (17) சேர்ந்து கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் வசிக்கும் வீட்டை நோட்டமிட்டு,முதியவர் தனிமையில் உள்ளதை உறுதி செய்துகொண்டு,நள்ளிரவில் வீட்டினுள் புகுந்த இருவரும் முதியவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டிலுள்ள நகை ரொக்கம் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது முதியவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளை எடுத்து பொருட்களுடன் இண்டிகா விஸ்டா காரின் மூலம் காரைக்குடிக்கு வந்தடைந்தனர்.காரைக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியவர்கள் மது அருந்த சென்றபோது கார் பஞ்சராகி விடவே மது பாட்டிலுடன் தனியார் விடுதியில் வந்து மது அருந்தியுள்ளனர். காரைக்குடி தெற்கு போலீசார் ரோந்து பணியின்போது பஞ்சராகி இருந்த காரை நோட்டமிட்டனர்.அப்போது தனியார் விடுதியில் ரசீதை கொண்டு தனியார் விடுதிக்கு சென்ற போலீசார் விசாரித்த போது விக்ரம் செல்வகணபதி இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவை கொலை கொள்ளை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து தனியார் விடுதியில் வைக்கப்பட்டிருந்த நகை,ரொக்கப்பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் தனிப்படையினர் கொள்ளையர்கள் இருவரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.