September 11, 2025
தண்டோரா குழு
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) கோவை மண்டலம் சார்பில் 9வது தேசிய உயர்கல்வி மாநாடு இன்று கோவையில் நடைபெற்றது.
‘உயர்கல்வியை சர்வதேசமயமாக்குதல் மற்றும் தொழில்மயமாக்குதல்’ என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் கல்வித்துறை நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சி.ஐ.ஐ. கோவை மண்டலத் தலைவர் மற்றும் சால்ஸர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் துரைசாமி வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
20 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த நாடுகளுக்கு குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. ஆனால், இன்று இந்தியா உலகிற்கே மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் இந்த மாற்றம் நமது கல்வி நிறுவனங்களால் சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில்,உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை உலகளாவிய பொறுப்புகளுக்கு தயார்படுத்துவதுடன், தொழில்துறையுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகை செய்துகொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டின் தலைவரும் கோவை ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலருமான செந்தில் கணேஷ், மாநாட்டின் தலைப்பு குறித்துப் பேசினார்.இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் உடன் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மதிப்புமிக்க ஆய்வு கூட்டணிகளை உருவாக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இந்திய பல்கலைக்கழகங்கள் தங்களது உறவுகளை அமைத்துக்கொள்ள முயலவேண்டும் என அவர் ஆலோசனை வழங்கினார். உயர்கல்வியை தொழில்மயமாக்குதல் என்பது பணிக்கு மட்டும் தயாராகுதல் என நிற்காமல், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் கற்றல் மற்றும் மேலாண்மைக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
சி.ஐ.ஐ.தெற்கு மண்டலத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் நிறுவன அறங்காவலர் ஆர்.நந்தினி சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில்,
இன்றைய உலகம் தொழில்நுட்பம், புவிசார் அரசியல் மற்றும் திறமை ஆகிய மூன்று அம்சங்களால் வடிவமைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.வரக்கூடிய அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், செமி கண்டக்டர் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவை மிக பெரும் முக்கியத்துவம் பெரும். செமி கண்டக்டர் துறைக்கு மட்டும் 2030க்குள் 10 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என அவர் கூறினார்.
அமெரிக்கா,ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளில் 60%க்கும் அதிகமானவை தொழில்துறையால் நிதியளிக்கப்படுகின்றன எனவும் தென் கொரியாவின் ஜி.டி.பி.யில் 5% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யப்படுகிறது எனவும் கூறினார்.
இந்தியாவும் இதேபோன்ற பாதையை ஏற்றுக்கொண்டால்,இந்த சாதனைகளை அடைய முடியும் என கூறிய அவர், நமது ஆய்வுகள் தயாரிப்புகளாகவும் காப்புரிமைகளாகவும் மாற்றப்படவேண்டும் என்பதில் கவனம் கொள்ளவேண்டும் என்றார்.
சி.ஐ.ஐ – ஐ.டபிள்யூ.என் பிரிவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில்,
பல சர்வதேச பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்கத் தொடங்கியுள்ளதாக கூறினார். மகாராஷ்டிரா ஒரு சர்வதேச கல்வி நகரத்தை அறிமுகப்படுத்தி, முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களை ஈர்த்து வருகிறது. அடுத்த ஆண்டு, 7 சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை நிறுவவுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வருவதால், போட்டி காரணமாக இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் உயரும். இதனால், இந்திய பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டங்களை சர்வதேச நிறுவனங்களின் தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும். ஒட்டுமொத்த துறையின் தரமும் உயரும். இதன் மூலம், நாட்டில் சிறந்த அறிவுப் பரிமாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
சிஐஐ – தமிழ்நாடு பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வனவராயர் தனது சிறப்புரையில்,
நீலகிரி உட்பட இந்தியப் பள்ளிகள் சர்வதேச புகழ் பெற்றவை. உயர்கல்வி நிறுவனங்கள் அவர்களின் முன்னேற்றத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்திய தொழில்துறையை சேர்ந்த பல நிறுவனங்கள் சர்வதேச புகழ் பெற்ற நிறுவனங்களாக மாறியுள்ளன. தொழில் துறை இந்த நிலையை அடைய முடியும்போது, இந்திய கல்வித்துறையாலும் அதை நிச்சயம் அடைய முடியும். என்றார்.
கோவை அதன் தொழில் திறமையால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. கல்வித்துறையில் இந்தியாவின் ஹார்வர்டு அல்லது பாஸ்டனாக மாறுவதற்கான ஆற்றல் கோவைக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் துவக்கவுரை வழங்கிய தயானந்த சாகர் பல்கலை துணைவேந்தர், பேராசிரியர் சத்தியநாராயணா,
இந்தியாவின் 100-வது சுதந்திர தினத்தில் இந்நாடு ஒரு முன்னோடி நாடாக இருக்கும் என்று கூறினார். 60+ ஆண்டுகளில் இந்தியா $2 டிரில்லியன் பொருளாதாரமாக மாறியது. அதன்பின் வெறும் 11 ஆண்டுகளில் $4 டிரில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்தது. இது அடுத்த 5 ஆண்டுகளில் $6 முதல் $8 டிரில்லியன் பொருளாதாரமாக மாறக்கூடும். இந்தியாவின் அறிவுசார் பொருளாதாரம் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியமானது. எதிர்காலத்தில், இந்தியா தனது இலக்குகளை அடைய பலதுறை சார்ந்த, அனுபவபூர்வமான கற்றல் அமைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.
சிஐஐ கோவை கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் இன் மேலாண்மை அறங்காவலர் சுஜனா அபிராமி நிறைவுரை ஆற்றினார்.