September 16, 2017
தண்டோரா குழு
சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் எச்.ராஜா எதிர்த்து போட்டியிட்ட பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. ஆனால் 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இதற்கிடையில்,தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ல் கூடியது.அதன்பின் பொதுக்குழு கூட்டமும் நடந்தது. இதில் துணை விதிமுறைகளில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று தேர்தல் காலை 10.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர், பி.மணி, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர்.
இந்நிலையில், இன்று மாலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா,
சாரணர், சாரணியர் இயக்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. அதனால் இந்த தேர்தலை ஏற்க முடியாது. சாரணர், சாரணியர் இயக்கத்தில் முறையாக பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேசிய தலைமை அலுவலக உத்தரவையும் மீறி சாரண, சாரணியர் இயக்க தேர்தல் நடைபெற்றுள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.