June 5, 2020
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி,தெற்கு மண்டலத்தில் ரூ.61 கோடியே 49 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப.,மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேலும்,கோயம்புத்தூர் மாநகராட்சி, வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.60.11 கோடி மதிப்பில் பையோ மைனிங் (திடக்கழிவு மேலாண்மை) அமைக்கும் பணிக்கு பூமிபூஜையினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
கோயம்புத்தூர் மாகராட்சியின் 100 வார்டுகளில் நாளொன்றுக்கு சேகரமாகும் சுமார் 1000 முதல் 1200 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் சுமார் 69 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டப்பட்டுள்ள சுமார் 9.5 லட்சம் கன மீட்டர்கொள்ளவிலான தரம் பிரிக்கப்படாத பழைய குப்பைகளினால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு மற்றும் தீ விபத்துக்கள் போன்றவை ஏற்பட்டு வருகிறது.இதனை கருத்திற்கொண்டு அவ்விடத்தில் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ள பழைய குப்பைகளை தரம் பிரித்து கழிவு செய்ய அறிவியல் சார்ந்த நவீன முறையில் சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம் கையாண்டு கழிவு செய்து சுமார் 69 ஏக்கர் அளவிலான நிலத்தினை மீட்டெடுக்க உத்தேசிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்க கீழ் ரூ.60.11 கோடி மதிப்பீட்டில் பையோ மைனிங் (Bio mining) முறையில் கழிவு செய்யும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விஞ்ஞான முறையில் கழிவுகளை தரம் பிரித்து கழிவு செய்யப்படவுள்ளது.இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்கூழல் மாசு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றார்.
பின்னர், தெற்கு மண்டலம், பொள்ளாச்சி மெயின் ரோடு ஆத்துப்பாலம் முதல் ஆனந்தாஸ் ஹோட்டல் வரை ரூ.49.00 இலட்சம் மற்றும் ஆனந்தாஸ் ஹோட்டல் முதல்
ஈச்சனாரி வரை ரூ.89.50 இலட்சம் மதிப்பில் தடுப்புச்சுவருடன் கூடிய மின்விளக்குகள் அமைக்கும் பணிக்கு பூமிபூஜையினையும் ஆகமொத்தம் ரூ.61 கோடியே 49 இலட்சத்து 50
ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.