May 17, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் மாநிலத் தேர்வு போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.
கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் சங்கத்தின் சார்பில்,கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் மாநிலத் தேர்வு போட்டி 2026–2027” சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 16.05.2026 அன்று கோவை விலாங்குறிச்சி பகுதியில் உள்ள டே நைட் டர்ஃப் மைதானத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு தாய்பாக்ஸிங் சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் மாஸ்டர் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, தாய்பாக்ஸிங் விளையாட்டின் ஒழுக்கம், உடற்திறன் மற்றும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.மேலும் தமிழ்நாடு தாய்பாக்ஸிங் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் டாக்டர் சி. பிராங்க்ளின் பென்னி அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த கருத்தரங்கத்தை கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் சங்கத் தலைவர் பி. அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சங்கத்தின் பொருளாளர் எஸ்.எம். சூர்யா பிரபு அவர்கள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்தார். மாவட்ட நிர்வாக உறுப்பினர்களான ஜெயவர்தனவேல் மற்றும் சிவராமச்சந்திரன் ஆகியோரும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்தனர்.
இந்த தொழில்நுட்ப கருத்தரங்கத்தில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தாய்பாக்ஸிங் அகாடமிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தாய்பாக்ஸிங் போட்டிகளில் தேவையான அடிப்படை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் நடைபெற்ற மாநிலத் தேர்வு போட்டியில் சிறப்பாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், வரவிருக்கும் தமிழ்நாடு மாநில தாய்பாக்ஸிங் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநிலத் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் சங்க நிர்வாகிகள் நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி கோவை மாவட்டத்தில் தாய்பாக்ஸிங் விளையாட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் முக்கியமான முயற்சியாக பாராட்டப்பட்டது.