December 6, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் வழக்கம். அதன்படி இன்றும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இந்த நேரத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அந்த காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கார் முழுவதுமாக தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கூட்டம் இருந்த நேரத்தில் அங்கு கார் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.