September 7, 2020
தண்டோரா குழு
பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய கோரி பாஜகவினர் மனு அளித்தனர்.
பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 9.5 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் என ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு பதிவு செய்யும் நபர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த உதவித்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 40 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் புதிதாக இணைக்கப் பட்டு உள்ளார்கள் அவர்கள் எல்லோருக்கும் முதல் தவணை 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வங்கியிலும் 300 முதல் 400 பேர் வரை உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாவட்ட பாஜக விவசாய அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது,
இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன் பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு தெளிவாக பரிசீலனை செய்து உதவித்தொகை உரிய நபர்களுக்கு தான் கிடைக்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார், அதன் படி நமது கோவை மாவட்டத்திலும் பிரதம மந்திரியின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் உரிய விவசாயிகள்தான் பயன் பெறுகிறார்களா என்பதை ஆராய்ந்து மேலும் விவசாயிகள் அல்லாத நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று இருப்பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.