April 8, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 75 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 300க்கும் மேல் அதிகரித்துள்ளது.கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மாநகராட்சியில் மீண்டும் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய (நேற்றைய) நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 75 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்,’’ என்றனர்.