December 6, 2021
தண்டோரா குழு
கோவை மாநகரில் அம்பேத்கர் சிலையை நிறுவ வலியுறுத்தி சமூக நீதிக்கட்சியினர் அம்பேத்கர் முகமூடிகளை அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அம்பேத்கர் நினைவு நாளான இன்று பல்வேறு இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக நீதி கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்திலும் கோவை நீதிமன்றம் எதிரிலும் அம்பேத்கர் சிலையை நிறுவ வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் முகமூடிகளை அணிந்தவாறு நூதன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதில் ” கோவை நீதிமன்றம் எதிரே அம்பேத்கர் சிலை நிறுவிடு”, “கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவிடு”, “கோவை மாநகரில் அம்பேத்கர் சிலையை நிறுவிடு” ஆகிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.