August 28, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகத்தை
அல் அமீன் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
கோவை உக்கடத்தில் அல் அமீன் காலனி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி சாலை அமைத்து தர வேண்டுமென பல நாட்களாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. எனினும் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அல் அமீன் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தூங்குகிறதா என்றும் கேள்விகளை எழுப்பி முழக்கமிட்டனர். தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை என்றால் ஊராட்சித்துறை அமைச்சரின் வீட்டை முற்றுகையிட தயாராக இருக்கிறோம் என்றும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.